
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் மிகவும் கவலையளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலகக்காரர்களை கண்டித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன், அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெறுகின்ற விடயங்கள் கரிசனையளிக்கின்றன என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர், அமெரிக்காவில் உள்ள அவுஸ்திரேலியர்களை வோசிங்டனில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நடைமுறையினை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்கள் ஆபத்தானவையாக மாறும் என்பதால் அவற்றை அவுஸ்திரேலியர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செனெட் மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறித்து திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அமெரிக்க மக்கள் புதிதாக தெரிவு செய்துள்ள அரசாங்கத்திடம் அதிகாரத்தை கையளிப்பது அமைதியான முறையில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.