எதிர்வரும் மார்ச் மாதம் அவுஸ்திரேலிய மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் பெப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் எனவும், மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடுப்பூசியை முதலில் வெளிநாட்டிலிருந்து வருகைத்தருபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், ஹோட்டலில் பணியாற்றுபவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கையாள்பவர்கள், சுகாதார பணியாளர்கள், முதியோர்கள் மற்றும் அங்கவீனர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து குறைவு என்பதால் அவர்களுக்கு இறுதியாகவே தடுப்பூசி போடப்படும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பொதுவான, ஒரு நோய்த் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடைமுறையைவிட சற்று வேகமாகவே கொரோனா தடுப்பூசி அனுமதி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் மருந்து விநியோகத்தினை எப்போது ஆரம்பிப்பது என்ற துல்லியமான திகதியை தன்னால் தெரிவிக்க முடியாது எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் குறிப்பிட்டுள்ளார்.