July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

Update: அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்களால் வன்முறை; நான்கு பேர் பலி

Update: Jan 7, 2021 at 05:25

அமெரிக்காவின் காங்கிரஸ் கட்டட வளாகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஏற்கனவே பெண் ஒருவர் பலியான நிலையில், மேலும் மூவர் வன்முறைகளில் உயிரிழந்துள்ளனர்.

 

Update: Jan 6, 2021 at 23:38

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றமான காங்கிரஸ் கட்டட வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் சூழப்பட்ட கட்டடத்திலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஜோ பைடனின் அதிபர் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடியிருந்த வேளையிலேயே ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வன்முறை நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனையடுத்து, தனது ஆதரவாளர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு ட்ரம்பும் கோரியுள்ளார்.

https://twitter.com/Susan_Hennessey/status/1346961437193760768?s=20

பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் காங்கிரஸ் கூட்டு-அமர்வும் இடைநிறுத்தப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வளாகத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கழுத்தில் காயமடைந்த பெண்ணொருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் காவல்துறையினர் பலரும் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை வாயிலில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது. கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் நடந்துள்ளது.

தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப்

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவரும் டொனால்ட் ட்ரம்ப், வாக்குப்பதிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறிவருகின்றார்.

தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பல நீதிமன்றங்களுக்கு சென்றும் ஜோ பைடனின் வெற்றியை ட்ரம்பால் மாற்றியமைக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே, ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்காக காங்கிரஸ் அவைகள் இன்று கூட்டு அமர்வுக்காக கூடியிருந்தன.

காங்கிரஸில் தேர்தல் முடிவை அறிவிக்கும் சம்பிரதாயபூர்வ கடமை உள்ள துணை அதிபர் மைக் பென்ஸ், தனக்கு விசுவாசமாகவே நடந்துகொள்வார் என்று டொனால்ட் ட்ரம்ப் நேற்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், தேர்தல் முடிவில் தலையிட தன்னால் முடியாது என்று மைக் பென்ஸ் அறிவித்தது ட்ரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தனது  ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் குவிந்துகொண்டிருப்பதாக ட்ரம்ப் நேற்று முதல் டொனால்ட் ட்ரம்ப் அவ்வப்போது டுவிட்டர் மூலம் அவர்களை உற்சாகப்படுத்திவந்தார்.

ஊரடங்கு உத்தரவு

இன்று பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் நிகழ்வு நடக்கத் தயாராகியிருந்த போது, காங்கிரஸ் வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்களால் அந்த நிகழ்வு தடைப்பட்டுள்ளது.

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாநகர மேயர் இன்று புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அயல் மாநிலங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்தியப் புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் வளாகத்திலும் தற்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாநில சட்டமன்றங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருவதாக தகவல்கள் வந்த வண்ணமுள்ளன.

அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை தொடர்பில் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.

‘இந்த மோசமான காட்சிகள்’ தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன், ‘அமைதியான முறையில் ஆட்சிமாற்றம் அமைய வேண்டும்’ என்று கோரியுள்ளார்.