இஸ்ரேலில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இரண்டாவது தடவையாக அந்த நாடு முடக்கல் நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் இந்த முடக்கல் காலத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் மாத்திரம் நடமாட முடியும். இதேபோன்று ஒரே தருணத்தில் இஸ்ரேலின் யூதவழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடகூடிய மக்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளும் வணிக வளாகங்களும் மூடப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.உலகில் கொவிட்-19 பரவல் வீதம் அதிகளவில் உள்ள நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. கடந்த வாரத்தில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 6000 என்ற கணக்கை தொட்டிருந்தது. பரவலைத் தடுக்கத் தவறியமைக்காக நாட்டின் தலைவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தனர்.
கொவிட்-19 காரணமாக 1.169 உயிரிழப்புகளும் கிட்டத்தட்ட 177,000 நோயாளர் எண்ணிக்கையும் இஸ்ரேலில் பதிவாகியுள்ளன. உலகில் தேசிய மட்டத்திலான முடக்கல் நிலையை மீள அறிவித்துள்ள முதல் வளர்ந்த நாடு இஸ்ரேல் என்று சொல்லப்படுகின்றது.
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகள் ‘சிவப்புக் கொடியை’ காட்டியுள்ளதால் மீண்டும் முடக்கலை கொண்டுவர நேர்ந்துள்ளதாக பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு கூறியுள்ளார்.