(Photo:Marise Payne /@MarisePayne)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு, வூஹானிற்கு செல்வதற்கு சீனா தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும் என அவுஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெயின் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழுவுக்கு அவசியமான விசாக்களை வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் எங்கிருந்து எப்படி தோன்றியது அதனை கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, என்பது குறித்து வெளிப்படை தன்மை அவசியம் என அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தீர்மானித்தமை முக்கியமான விடயம் எனவும் அவுஸ்திரேலியா இது குறித்து அறிய ஆர்வமாக உள்ளதாகவும் மரைஸ் பெயின் தெரிவித்துள்ளார்.
இந்த சர்வதேச நோய்தொற்றின் போது சீனாவின் ஒத்துழைப்பு அதனை எதிர்கொள்வதற்கான திறனை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இவ் ஆராய்ச்சியானது அடுத்த வைரஸினை எதிர்கொள்வதற்கு உலகை தயார்ப்படுத்தும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெயின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.