January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற அங்கத்துவ நாடாக நோர்வே தெரிவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2021- 2022 காலப் பகுதிக்கான நிரந்தரமற்ற அங்கத்துவ நாடாக நோர்வே தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனூடாக இந்தியா, அயர்லாந்து, கென்யா மற்றும் மெக்சிகோ ஆகிய ஏனைய நிரந்தரமற்ற அங்கத்துவத்தைக் கொண்ட நாடுகளுடன் நோர்வேயும் இணைந்துள்ளது.

2001 – 2002 காலப்பகுதியில் பாதுகாப்பு சபையில் இறுதியாக அங்கம் வகித்திருந்த நோர்வே, 20 ஆண்டுகளின் பின்னர் தற்போது மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர அங்கத்தவர்களாக அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற நாடுகளின் கொடியேற்ற வைபவத்தில் ஐக்கிய நாடுகளுக்கான நோர்வே தூதுவர் மோனா ஜுல் குறிப்பிடுகையில், “எமது முயற்சிகளுக்கு ஆதாரமாக சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் போன்றன அமைந்திருக்கும். சமாதான இராஜதந்திரம், பெண்களை உள்வாங்குதல், சிவிலியன்களையும் காலநிலையையும் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு போன்றன எமது முன்னுரிமை வழிகாட்டல்களாக அமைந்திருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.