July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் அகதிகள் கலவரம்!

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் இரண்டு அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கூரை மீதேறி, தீ மூட்டியுள்ளனர்.

தடுப்பு முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்தே, அகதிகள் இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தாம் அனுமதி கோரியதாகவும் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து கலவரத்தில் ஈடுபடவேண்டியேற்பட்டதாகவும் அகதியொருவர் தெரிவித்துள்ளார்.

‘நாளொன்றிற்கு 22 மணித்தியாலங்கள் உள்ளே பூட்டிவைக்கின்றனர், எங்கள் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது எங்களைக் கைதிகள் போல நடத்துகின்றார்கள்’ என கலவரத்தில் ஈடுபட்ட அகதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதன் காரணமாக தாம் உளவியல் மற்றும் உடல் நல ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருடன் இணைய விரும்புகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அகதிகள் மெத்தைகளை தீ மூட்டுவதையும் கூரையின் மேல் ஏறி நின்று “போதும் போதும்” என கோசங்களை எழுப்புவதையும் காண்பிக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயல்பவர்கள் மற்றும் குற்றவியல் நடவடிக்கை காரணமாக விசாக்கள் இரத்து செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட 225 பேர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசினால் நவம்பர் இறுதியில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.