(Photo:Boris Johnson /Facebook)
பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய காட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனவரி 6 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் 6 வாரங்களுக்கு மூடப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் நோக்கிலேயே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 5 ஆவது நாடாக பிரிட்டன் விளங்குவதுடன், அங்கு இதுவரையில் 27 இலட்சத்து 13 ஆயிரத்து 563 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 75 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலங்களில் 58,784 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 407 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய பல நாடுகளிலும் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.