
file photo: Facebook/ Free Julian Assange
விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜூலியன் அசாஞ்சின் உளவியல் நிலையைக் கருத்திற்கொண்டே, அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கு எதிரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ச் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கக்கூடிய நிலையில் அமெரிக்கா இல்லையென நீதிபதி வனேசா பரைட்செர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அசாஞ்ச், தனக்குத் தானே தீங்கிழைத்துக்கொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருப்பதற்கான ஆதாரங்களை முன்வைத்துள்ள நீதிபதி வனேசா, ‘மனச்சோர்வடைந்துள்ள ஒருவர் தனது எதிர்காலத்தை அஞ்சுகின்றார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
‘அமெரிக்கா ஜூலியன் அசாஞ்ச் மீது விபரித்துள்ள நடைமுறைகள், அவர் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்காது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010- 2011 காலப்பகுதியில் பல இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியமைக்காக 49 வயதான அசாஞ்சைக் கைதுசெய்ய அமெரிக்கா முயற்சிக்கின்றது.
விக்கிலீக்ஸ் மூலம் இரகசியங்களை வெளியிட்டதால், ஜூலியன் அசாஞ்ச் சட்டத்தை மீறியுள்ளதாகவும் உயிராபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
தன் மீதான ‘குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை’ என அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.