
File photo : Facebook/ Donald Trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் தனது இறுதி நேர முயற்சிகளுக்காக இராணுவத்தினரை பயன்படுத்துவதை கைவிடவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உயிருடன் உள்ள பத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக இராணுவம் தலையிட வேண்டிய நிலையை உருவாக்க முயற்சிப்பதோடு அதற்காக நெருக்கடியொன்றை தோற்றுவிப்பார் என்ற அச்சத்தினை முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் தங்கள் கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
தேர்தல் சர்ச்சைகளில் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்த முயற்சிப்பது ஆபத்தான, சட்டவிரோதமான மற்றும் அரசமைப்பிற்கு முரணான செயற்பாடாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்க தேர்தலின் முடிவை தீர்மானிப்பதில் அமெரிக்க இராணுவத்திற்கு எந்தப் பங்கும் இருக்கக்கூடாது என்றும் இக் கடிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடும் இராணுவ, சிவில் அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டிய நிலையேற்படுவதோடு கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டொபர் மில்லரும் அவரது குழுவினரும் பைடன் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கடிதத்தில் டொனால்ட் ட்ரம்பின் கீழ் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட இருவரும் கையெழுத்திட்டுள்ளமை விசேட அம்சமாகும்.