நிஜர் குடியரசின் இரு கிராமங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பிரிஜி ரபினி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை மாலி எல்லைப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த தாக்குதலில் நிஜர் குடியரசின் டொம்பங்கோ என்ற கிராமத்தில் 70 பேரும், ஸாரூம்தரேய் என்ற கிராமத்தில் 30 பேரும் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிஜர் பிரதமர் பிரிஜி ரபினி குறித்த இரு கிராமங்களுக்கும் நேற்று விஜயம் செய்து, நிலைமைகளைக் கண்டறிந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயற்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அண்மைக் காலமாக நிஜரிலும் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நிஜர் ஜனாதிபதித் தேர்தலின் முதல் கட்டம் முடிவடைந்து, பெப்ரவரி மாதத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.