photo: Facebook/ Police Nationale
புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிரான்ஸில் ஜனவரி 2 ஆம் திகதி முதல் இரவுநேர ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் 15 பிராந்தியங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ஜனவரி 2 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இரவு நேர களியாட்டங்களைத் தடுப்பதற்காக இரவு 8 மணி முதல் அமுல்ப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு உத்தரவை இரண்டு மணித்தியாலங்கள் முன்னதாகவே பிறப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 5 ஆவது நாடாக பிரான்ஸ் விளங்குவதுடன், அங்கு இதுவரையில் 26 இலட்சத்து 39 ஆயிரத்து 773 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 64 ஆயிரத்து 765 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 19,348 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் 133 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய பல நாடுகளிலும் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பல நாடுகளிலும் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.