பயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
ஏனைய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கான அங்கீகாரம் கிடைக்காதுள்ள நிலையில் பயோன்டெக் நிறுவனத்தின் மருந்துகளுக்கு அதிக தேவையேற்படலாம். இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தற்போது போதுமான மருந்துகள் இருப்பதாக தெரியவில்லை. இடைவெளியுள்ளது என தெரிவித்துள்ள பயோன்டெக்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி உகுர் சஹின், ஏனைய மருந்துகள் போதியளவிற்கு இல்லாததன் காரணமாக அந்த இடைவெளியை நாங்கள் நிரப்பவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அனுமதி வழங்க தாமதமாகியதாலும், பிரசல்ஸ் சிறியளவிலான மருந்துகளிற்கே அனுமதி வழங்கியதாலும் ஐரோப்பாவின் பயோன்டெக்கின் மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்த தாமதங்கள் காரணமாக ஜேர்மனியில் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.கொரோனா மருந்து வழங்குவதற்கான சில நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஜேர்மனியின சுகாதார அமைச்சு அஸ்டிராஜெனேகா மருந்திற்கு உடனடியாக அங்கீகாரத்தை வழங்குமாறு ஐரோப்பிய மருந்து ஒழுங்குபடுத்தும் அமைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.