November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் அதிகாரபூர்வமாக வெளியேறியது

File photo : twitter/ Boris Johnson

48 ஆண்டுகளுக்கு பின்னர் 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக பிரிட்டன் வெளியேறியது.
இதன்படி ஒன்றியத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றுவதை பிரிட்டன் நிறுத்திக் கொண்டுள்ளது.
இதுவரை காலமும் பயணம், வர்த்தகம், குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு கூட்டுறவு உள்ளிட்ட விவகாரங்களில் பிரிட்டனில் இருந்துவந்த நடைமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய ஏற்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

1973 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உறுப்பு நாடாக இணைந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, ஸ்வீடன், ஸ்பெயின் உட்பட 28 நாடுகள் இடம்பெற்றுள்ளதால் பிரிட்டனால் பல விவகாரங்களில் சுயமாக முடிவெடுக்க இயலாத நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து பிரிட்டன் இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான பிரிட்டன் மக்கள் வாக்களித்திருந்தனர்.

குறித்த வாக்கெடுப்பு நடைபெற்று 4 வருடங்களுக்கு பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் நாடாளுமன்றத்திலும் குறித்த ஒப்பந்தம் இரு தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 2020 டிசம்பர் 31 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் முறைப்படி வெளியேறுவது தொடர்பாக அறிவித்தது.

பிரிட்டன் வரலாற்றில் இந்த புதிய அத்தியாத்தை மக்கள் கொண்டாடி வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், அனைத்து மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, நாட்டை ஒற்றுமைப்படுத்தி, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வோம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.

இது ஒரு யுகத்தின் தொடக்கம். இனி புதிய பாதையில் பிரிட்டன் பயணிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.