சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து 2019 ஆம் ஆண்டு இறுதியில் முதன் முதலாகக் கண்டறியப்பட்ட கொவிட்- 19 வைரஸ் முழு உலகையும் ஆட்டம் காணச் செய்து, ஒரு வருடமாகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று பரவி ஒரு வருடமாகின்ற போதிலும், வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது உலகின் முன்னணி நாடுகளுக்கே சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில், உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 மில்லியனைத் தாண்டியுள்ளதோடு, 18 இலட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 59 மில்லியனுக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், சிகிச்சை பெறுபவர்களில் ஒரு இலட்சத்து 6 ஆயிரத்து 616 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா 2 ஆம் இடத்திலும் பிரேசில் 3 ஆம் இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, 3 இலட்சத்து 50 ஆயிரத்து 774 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று 21 ஆயிரத்து 951 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய இதுவரை 12 இலட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 774 பேர் உயிரிழந்துள்ளதுடன், 9 இலட்சத்து 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
அடுத்து, 3 ஆம் இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 76 இலட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு, ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்துள்ளனர். 67 இலட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமானோர் கைகளைக் கழுவி சுத்தப்படுத்துவதற்கான வசதிகள் இன்றி வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் 2 ஆவது உருமாறிய அலையாக கருதப்படுகின்றது.
2 ஆவது உருமாறிய வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு துரிதமாக பரவ கூடிய தன்மையைக் கொண்டுள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பல நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.
மேலும் கொரோனா வைரஸ{க்கு எதிரான தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு பல நாடுகளும் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.