அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தினை பயன்படுத்திய மருத்துவ தாதியொருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றும் 45 வயதுடைய மத்தியு என்ற தாதியே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தனது முகநூலில் இதனை பதிவு செய்துள்ள அவர், 18 ம் திகதி தான் பைசரின் கொரோனா மருந்தினை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மருந்து பயன்படுத்திய அன்று கையில் வலி காணப்பட்டது. ஆனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதற்கு ஆறு நாட்களின் பின்னர் கிறிஸ்மஸ் தினத்தன்று அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
குளிர், தசைவலி, உடல்சோர்வு ஆகியன காணப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சோதனையிட்டவேளை தான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது என அவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இது எதிர்பாராத விடயமல்ல என தொற்றுநோயியல் நிபுணரான கிறிஸ்டியன் ரமெர்ஸ் தெரிவித்துள்ளார்.
மருந்து சோதனை முயற்சிகளின் போதே கொரோனா வைரஸ் மருந்து பலனளிக்க தொடங்குவதற்கு பத்து முதல் 14 நாட்களாகும் என்பது தெரிந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்டோஸ் மருந்து 50 வீதம் பாதுகாப்பளிக்கும், இரண்டாவது டோஸ் மருந்து 95வீதம் பாதுகாப்பளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.