தாய்வானிற்கும் திபெத்திற்கும் ஆதரவளிக்கும் நடவடிக்கைகள் குறித்த சட்டமூலத்தில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளமை குறித்து சீனா சீற்றம் வெளியிட்டுள்ளது.
தாய்வானிற்கும் திபெத்திற்கும் கொரோனா நிவாரண நிதியாகவும் உதவித் தொகையாகவும் 2.3 டிரில்லியனை வழங்குவதற்கான சட்டமூலத்தில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.
தாய்வானிற்கும் திபெத்திற்கும் ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை சீனா கடுமையாக எதிர்க்கின்றது என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.
தனது தேசிய இறைமை பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நலன்களை பாதுகாப்பதில் சீனாவிற்கான உறுதிப்பாடு சிறிதளவும் தளர்ச்சியடையவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனா -அமெரிக்க உறவுகள் பாதிப்படைவதை தவிர்ப்பதற்காக சீனாவை இலக்கு வைக்கும் இந்த சட்டத்தினை அமெரிக்கா நடைமுறைப்படுத்தக்கூடாது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கையை தாய்வான் வரவேற்றுள்ளது.அமெரிக்கா சர்வதேச அளவில் தாய்வானின் முக்கியமான சகா என தெரிவித்துள்ள தாய்வான் ஜனாதிபதியின் அலுவலகம் அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்றுள்ளது.