January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை வெளியிட்ட சீன பத்திரிகையாளருக்கு 4 வருட சிறைத்தண்டனை

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் குறித்த செய்திகளை வெளியிட்ட நபருக்கு சீனா நான்கு வருடசிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

சீனாவை சேர்ந்த 37 வயதான சிட்டிசன் பத்திரிகையாளர் ஜாங் ஜான் என்ற பெண்ணிற்கே சீனா சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.

அவர் அரச சட்ட விதிக்கு மாறாக கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகளை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சீனா இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புகள், மக்கள் அனுபவிக்கும் துயரங்கள், சீன அரசின் செயற்பாடு போன்ற பல்வேறு தகவல்களை செய்தியாக அவர் வெளியிட்டுள்ளார்.

ஜாங் ஜான் போன்ற பல பத்திரிகையாளர்கள் சீனாவில் இருந்து கொடுத்த தகவல்களின் அடிப்படையிலே சீனா அரசு மறைத்த கொரோனா உண்மை நிலவரத்தை உலக ஊடகங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.

இந்நிலையில், வெளி நாட்டு ஊடகங்களுக்கு வூஹானில் பரவிய வைரஸ் தொடர்பாக பேட்டியளித்தது, தவறான தகவல் மூலம் மக்களியே வதந்தி பரப்பியது என பல்வேறு குற்றங்கள் அடிப்படையில் சீனா அரசால் ஜாங் ஜான் கடந்த மே மாதம் கைதுசெய்யப்பட்டார்.

அவரது கைதுக்கு எதிராக, நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த மேன்முறையீடு விசாரணையிலேயே 4 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வூஹானில் கொரோனா வைரஸ் தீவிரமடையத் தொடங்கியதை தொடர்ந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு கடுமையாக தணிக்கை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.