இங்கிலாந்தில் சமீபத்தில் பரவத்தொடங்கியுள்ள புதிய வகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள பலர் ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதியவகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
மட்ரிட்டில் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர்களில் மூவர் சமீபத்தில் பிரிட்டன் சென்று வந்தவரின் உறவினர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
நான்காவது நபரும் பிரிட்டனிற்கு பயணம் மேற்கொண்டடிருந்தவர் என ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் நால்வரும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூவர் இதேவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் சோதனை முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் புதியவகை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளன.
இதேவேளை, பிரான்ஸ் புதியவகை வீரியமிக்க கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.
19 ம் திகதி லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த பிரான்ஸ் பிரஜையே பாதிக்கப்பட்டுள்ளார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மேலும் பல நாடுகள் புதியவகை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதை உறுதி செய்துள்ளன.
ஜப்பானில் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இங்கிலாந்திலிருந்து சென்றவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.