file photo: Facebook/ Abiy Ahmed Ali
எத்தியோப்பியாவின் புலன் கவுண்டி மாநிலத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த புதன்கிழமை இனந்தெரியத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 207 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ‘ஒரு இனப் படுகொலை’ என்று அந்நாட்டு ஜனாதிபதி அபி அஹ்மட் தெரிவித்திருந்ததோடு, ஆயுதக் குழுக்களை தாக்கி அழிக்குமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எத்தியோப்பிய இராணுவத்தினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 42 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பியாவின் அம்ஹரா, ஷினாஷா, ஒரோமோ மற்றும் அகிவ் போன்ற சமூகங்கள் மீது கடந்த செப்டம்பர் மாதம் முதல் இனக் கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இதனால், அப்பிரதேசங்களில் இருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக புலன் கவுண்டி பிராந்திய அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியாவின் இன்னோர் பகுதியான டைக்ரே மாநிலத்தில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருவதோடு, 9 இலட்சத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் இடம்பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.