
அல்ஜசீராவின் பல ஊடகவியலாளர்களின் கணிணிகளை இலக்கு வைத்து இந்த வருடம் பல ஊடுருவல்கள் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட நவீன ஸ்பைவேரை பயன்படுத்தியே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் இந்த சைபர் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கலாம் என சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
கனடாவை சேர்ந்த பல்கலைக்கழகமொன்றின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
என்.எஸ்.ஓ குழுமத்தின் பெகசஸ் ஸ்பைவெர் எவ்வாறு 36 பத்திரிகையாளர்கள் உட்பட அல்ஜசீராவை சேர்ந்த பலரின் கையடக்க தொலைபேசிகளை தாக்கின என்பது குறித்த விபரத்தினை கனடா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
அல்ஜசீராவின் தலைமையகத்தில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளினதும் தயாரிப்பாளர்களினதும் கையடக்கதொலைபேசிகள் இலக்குவைக்கப்பட்டன என கனடா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு இராச்சியம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம் என கனடா பல்கலைகழகத்தின் சைபர் பாதுகாப்பு குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அல்ஜசீராவை சேர்ந்த புலனாய்வு செய்தியாளர் ஒருவர் இதனை உறுதி செய்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமைச்சர்களை தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தப்படும் தொலைபேசிக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என தமெர் அல்மிசால் என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.