November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய வகை கொரோனா: ‘பிரிட்டனுக்கான விமான சேவைகளை இந்தியாவும் இடைநிறுத்தியது’

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால், அந்நாட்டிற்கான விமானப் போக்குவரத்து சேவைகளை டிசம்பர் 31 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சு, ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தி, முடிவெடுத்துள்ளது.

இது ஒரு இடைக்கால நடவடிக்கை என தெரிவித்துள்ள அமைச்சர், பிரிட்டன் உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாய பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனைகளின் போது அடையாளம் காணப்படும் நோய்த் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில், பல்வேறு நாடுகளும் பிரிட்டனுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.