பிரிட்டனில் மிகவும் ஆபத்தான உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிரிட்டனிலிருந்து பயணிகள் வருவதை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றன.
நெதர்லாந்தும் பெல்ஜியமும் பிரித்தானியாவிற்கான விமானசேவைகளை நிறுத்தியுள்ளன.
புதிய கட்டுப்பாடுகளை பிரிட்டன் அறிவித்து ஒரு மணிநேரத்தில் நெதர்லாந்து பிரிட்டனிலிருந்து விமானங்கள் வருவதை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி வரை இந்த தடை நடைமுறையிலிருக்கும் என நெதர்லாந்து அறிவித்துள்ளது.
இதன் காரணமாக புதிய வைரஸ் நெதர்லாந்தில் பரவும் ஆபத்து தவிர்க்கப்படும் என அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த தடை அடுத்த 24 மணிநேரத்திற்கு நடைமுறையிலிருக்கும் என அந்த நாட்டின் பிரதமர் அலெக்ஸான்டர் குரூ தெரிவித்துள்ளார்.பெல்ஜியம் புகையிரத சேவைகளையும் இடைநிறுத்தியுள்ளது.
தனது அரசாங்கம் விமான சேவைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரான்ஸும் ஜேர்மனியும் விமான சேவைகளை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனி பிரிட்டனிலிருந்து விமானங்கள் வருவதை தடைசெய்வது குறித்து ஆராய்ந்துவருதாக ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.