Photo: Twitter/ Sebastián Piñera
கொவிட் தடுப்பு ஒழுங்கு விதிகளை மீறியதாக சிலி நாட்டின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேராவுக்கு 3,500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செபஸ்டியன் பினேரா, பெண்ணொருவருடன் முகக்கவசம் அணியாது செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டமைக்காகவே அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டள்ளது.
சிலி ஜனாதிபதி செபஸ்டியனுடன் பெண்ணொருவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி படமொன்று டிசம்பர் ஆரம்பம் முதல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
அந்தப் படத்தில் இருவருமே முகக்கவசம் அணிந்திருக்காமை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள கசாகுவா நகரத்தின் கடற்கரைப் பகுதியில் வைத்து குறித்த பெண்ணின் கோரிக்கைக்கு அமைய அந்த செல்ஃபி படத்திற்கு அவர் இணங்கியிருந்தார்.
ஆனால் சிலி நாட்டின் சட்டத்திற்கமைய பொது வெளியில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அதனை மீறினால் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
இதன்படி ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, அந்த ஒழுங்கு விதியை மீறிய காரணத்தினால் அந்நாட்டு நீதிமன்றத்தினால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் இதுவரையில் 581,135 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அதனால் 16,051 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.