அமெரிக்க அரசாங்கத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிகமோசமான சைபர் தாக்குதலிற்கு ரஷ்யாவே காரணம் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதலில் ரஷ்யாவே ஈடுபட்டுள்ளது என மிக தெளிவாகவே தெரிவிக்கமுடியும் என மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
எனினும் ரஷ்யாவிற்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் எதனையும் மைக்பொம்பியோ வெளியிட தவறியுள்ளார்.
பலமாதங்களாக ரஷ்யா அமெரிக்க அரசாங்கத்தின் பல ஸ்தாபனங்களையும் தனியார் நிறுவனங்களையும் இலக்குவைத்து ஊடுருவியுள்ளது.பல உலகநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களையும் ரஷ்யா இலக்குவைத்துள்ளது.
அமெரிக்க எரிசக்தி திணைக்களம் பாரிய சைபர் தாக்குதலொன்றை சந்தித்துள்ளது என அமெரிக்க எரிசக்தி திணைக்களம் உறுதிசெய்துள்ளது.
அமெரிக்காவின் அணுவாயுதங்களிற்கு பொறுப்பான எரிசக்தி திணைக்களம் சைபர் தாக்குதலிற்குள்ளானமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் தாக்குதலை தொடர்ந்து பதில் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள எரிசக்தி திணைக்களம் வர்த்தக வலையமைப்புகள் மாத்திரம் இலக்குவைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது.