July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் ‘மொடர்னா’ தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ‘மொடர்னா’ தடுப்பூசி பாவனைக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னா கருதப்படுகின்றது.

‘மொடர்னா’ தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தடுப்பூசிகள் 94 வீத செயல்திறன் கொண்டவை என்றும் அவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நாளொன்றுக்கு கொரோனா தொற்று காரணமாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்ற நிலையில், பைசர் தடுப்பூசிக்கு அடுத்ததாக ‘மொடர்னா’ மருந்து பாவனைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசி 30,000 பேரிடம் பரிசோதிக்கப்பட்டு, 94.1 வீத செயல்திறனைக் காட்டியதைத் தொடர்ந்தே அமெரிக்காவில் பாவனைக்கு வருகின்றது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.