
சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தரவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிபரம் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரிற்கு தொழில்வாய்ப்பிற்காக புலம்பெயர்ந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த 320,000 தொழிலாளர்களில் 150,000க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் பெருமளவானோர் சிறிய அறைகளில் தங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, சிறிய அறைகளில் மாத்திரம் டிசம்பர் 13 வரை 54000 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதமளவில் இந்த தொழிலாளர்கள் அனைவரையும் ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது பிசிஆர் சோதனைக்கு உட்படுத்திவிட்டதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெருமளவு தொழிலாளர்கள் ஒரே பகுதியில் வசிப்பதனால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து அதிகம். அதன் காரணமாகவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் சமூக விலக்கல் நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை எனவும் சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.