July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் இரத்து

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளின் போது, எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதென தவறான முடிவுகள் காண்பித்ததை அடுத்து பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை பெறுவதற்காக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் சி.எஸ்.எல் நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இரத்துச்செய்துள்ளது.

குறித்த கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனைகள் 216 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்தில் எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளைக் காட்டியுள்ளதோடு, நான்கில் ஒருவருக்கு எச்.ஐவி. பொசிட்டிவ் என்ற தவறான முடிவுகளையும் காட்டியுள்ளது.

இதனையடுத்து, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் குறித்த கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து பல்கலைகழகம் குறிப்பிட்ட மருந்தினை தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ள பிரதமர், விஞ்ஞான ரீதியிலான முடிவுகளின் படியே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம், கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கும் நடவடிக்கைகள் மிகுந்த அவதானத்துடன் மேற்கொள்ளப்படுகின்றதையே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சி.எஸ்.எல் நிறுவனமும் மருந்து தயாரிக்கும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட மருந்தினை சோதனை செய்வதற்காக தங்களை ஈடுபடுத்தியவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக முடிவுகள் வெளியாகியிருந்த போதிலும், பின்னர் இடம்பெற்ற சோதனைகளில் அது பிழையான முடிவு என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தத் தடுப்பூசியால் எச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், தடுப்பூசிகள் மீதான பொது மக்கள் நம்பிக்கையை இது குறைமதிப்பிற்குட்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சோதனைகள் கைவிடப்பட்டதாக சுகாதாரத் துறையின் செயலாளர் பிரெண்டன் மர்பி தெரிவித்துள்ளார்.