July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கத் திட்டம் : ஜோ பைடன் உறுதி

Photo: Joe Biden/Facebook

தனது பதவிக்காலத்தில் முதல் 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தப்போவதாக ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலே இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பைடன், கொரோனா வைரசினை கட்டுப்படுத்த தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்தினார்.

தாம் பதவியேற்ற அடுத்த 100 நாட்களில் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிடாது என தெரிவித்துள்ள பைடன், ஆனால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்துதல், தடுப்பூசி முகாம்கள், பள்ளிகள் திறப்பது போன்றவையே எனது முதல் 100 நாட்களின் இலக்கு என்றார்.

அத்துடன்  100 நாட்களில் குறைந்தபட்சம் 100 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்க மக்களுக்கு போட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

முன்னதாக, இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பூசி குறித்த விஷயங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தன.

மருத்துவக் குழு

இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய தொற்று பணிக்குழு ஒன்றை ஜோ பைடன் அமைத்துள்ளார்.மொத்தம் 13 பேர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்ற நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பைசர் ஜெர்மனியின் பயோன்டெக், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இதில் பைசர் தடுப்பூசி 95 சதவீதமும் மார்டானா நிறுவனத்தின் தடுப்பூசி 100 சதவீதமும் செயல்திறன்மிக்கது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 தடுப்பூசிகளும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை அமெரிக்காவில்  15மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை  286,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.