January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நியுசிலாந்து மசூதி கொலையாளி இந்தியா உட்பட பல நாடுகளிற்கு பயணம் மேற்கொண்டார்’

நியுசிலாந்தில் கடந்த வருடம் கிறிஸ்சேர்ச்சில் உள்ள இரு மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொண்டு 50க்கும் அதிகமானவர்களை கொலை செய்த பிரென்டன் டரன்ட், தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் இந்தியா உட்பட பல உலக நாடுகளிற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

2019 மார்ச் மாதம் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல்கள் குறித்த விசாரணை அறிக்கைகள் இன்று வெளியாகியுள்ளன.

இந்த அறிக்கையில், பிரென்டன் டரென்ட் இந்தியா உட்பட பல நாடுகளிற்கு சென்றமை குறித்த விபரம் காணப்படுகின்றது.

அவர் சம்பளம் பெறும் வேலையை செய்யவில்லை. மாறாக தனது தந்தையின் பணத்தில் வாழ்ந்தார்.அதனை பயன்படுத்தி அவர் உலகின் பல நாடுகளிற்கு சென்றார். 2014 முதல் 2017 வரை அவர் உலகின் பல நாடுகளிற்கு சென்று வந்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வடகொரியா உட்பட பல நாடுகளிற்கு அனேகமாக தனியாகவே சென்றார் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அவர் நீண்ட நாட்கள் தங்கியிருந்தார். 2015 நவம்பர் முதல் 2016 ஜனவரி வரை அவர் இந்தியாவில் தங்கியிருந்தார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் அவர் எவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் அறிக்கையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் வெளிநாடுகளிற்கான பயணங்களின் போது தீவிரவாத அமைப்புகளை சந்தித்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நியுசிலாந்து தெரிவித்துள்ளது.

பிரென்டன் டரென்ட் உத்தேச இலக்குகளை தேடினார். ஆயுதபயிற்சி பெற்றார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனவும் நியுசிலாந்து தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கான பயணங்கள் அவரது வலதுசாரிக் கொள்கையினை ஆழமாக்கவில்லை. ஆனால் அவர் வலதுசாரி இணையத்தளங்களிற்கு அதிகளவிற்கு சென்றுள்ளார் என விசாரணைகுழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.