Photo: Twitter/ NHS England
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடிவரும் நிலையில், உலகின் முதல் நாடாக பிரிட்டன் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணியை ஆரம்பித்துள்ளது.
மத்திய இங்கிலாந்தின் கொவென்ட்ரி நகரில் மார்கரேட் கீனன் என்ற 90 வயது மூதாட்டி, உலகிலேயே முதல் நபராக கொரோனாவுக்கு எதிரான (பரீட்சித்து அங்கீகரிக்கப்பட்ட) முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்திய முதலாவது பெண்மணி என்பது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், ‘இது எனக்கு முன்கூட்டியே கிடைத்த பிறந்தநாள் பரிசு’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், கொரோனாவுக்கு எதிரான போரில் இது முக்கியமான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் 70 மருத்துவமனைகளில 80,000 டோஸ் மருந்துகளை வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
80 வயதுக்கு மேலான முதியவர்கள், முதியோர் காப்பகத்தில் உள்ளவர்கள், கொரோனா முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
21 நாள்களுக்கு பிறகு, இரண்டாம் டோஸ் போடப்படவுள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இது முக்கிய திருப்பு முனையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 1.6 மில்லியன் மக்கள் கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 61,000க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துக்கு, உலகின் முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.