அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி லொயிட் ஒஸ்டின் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடன், புதிய பாதுகாப்பு செயலாளராக இராணுவ அதிகாரி லொயிட் ஒஸ்டினைத் தெரிவுசெய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பென்டகனுக்குத் தலைமை தாங்கும் முதல் கருப்பினத்தவராக 67 வயதுடைய ஒஸ்டின் காணப்படுவார் என அமெரிக்கா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பராக் ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பீடத்தின் தலைவராக ஒஸ்டின் பணிபுரிந்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படக் கூடியவர்களில் ஒஸ்டினும் ஒருவர் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் காணப்பட்ட போதிலும், தற்போது அவரே புதிய பாதுகாப்பு செயலாளர் என்ற நிலை வலுவடைந்துள்ளது.
முக்கிய பதவிகளுக்கு பைடன் சிறுபான்மை இனத்தவர்களையும், பெண்களையும் நியமிக்க வேண்டும் என அமெரிக்காவின் தேசிய சிவில் உரிமை அமைப்புகளும் ஜனநாயக கட்சியினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே, இந்த நியமனம் இடம்பெறவுள்ளதாகவும், வார இறுதியில் பைடன் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது, ஒஸ்டின் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் நெருக்கமாக செயற்பட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.