October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டதாக கனவு காணாதீர்கள்’

கொரோனா வைரஸ் மருந்துகளின் சோதனை முடிவுகள் காரணமாக வைரஸ் ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவு காண ஆரம்பிக்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் அதனோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் முதலாவது உயர்மட்ட அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

பாதை இன்னமும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் காரணமாக மனித குலத்தின் சிறந்த குணாதிசயங்களும் மோசமான குணாதிசயங்களும் கொரோனா வைரசினால் வெளிப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காலத்தின் இரக்கம் மற்றும் சுய தியாகத்தின் எழுச்சியூட்டும் செயல்களையும்,அறிவியல் மற்றும் புதுமைகளின் சாதனைகளையும் இதயத்தை தூண்டும் ஒற்றுமையின் வெளிப்பாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,சுயநலம், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுதல், பிரிவினைகள் போன்ற குழப்பம் ஏற்படுத்தும் சமிக்ஞைகளும் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

சதி குறித்த செய்திகளால் விஞ்ஞானம் மூழ்கடிக்கப்பட்ட இடங்களில்,ஒற்றுமை பிரிவினையால் பலவீனப்படுத்தப்பட்ட இடங்களில் தியாகத்திற்கு பதில் சுயநலம் முக்கியம் பெற்ற இடங்களில் வைரஸ் செழிக்கின்றது- வைரஸ் பரவுகின்றது.

அடிப்படை பலவீனங்களிற்கு வைரஸ் தீர்வை காணாது.கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்ததும் வறுமை, பட்டினி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்றவற்றிற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றின் சுரண்டல் முறைக்கும், எல்லா உயிர்களையும் நிலைநிறுத்தும் பூமியை புறக்கணிக்கும் நிலைக்கும், நாம் திரும்பிச்செல்லக்கூடாது.அச்சம் மற்றும் தலையீடு என்ற நச்சு வட்டத்திற்கும், இந்த வைரஸ் உருவாவதற்கு காரணமான பிரிவினைவாத அரசியல் ஆகியவற்றிற்கு செல்லவும் முடியாது என வும் அவர் தெரிவித்துள்ளார்.