கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிற்கான தனது ஆதரவை மீண்டும் வெளியிட்டுள்ளார்.
புதுடில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் கருத்தை வெளியிட்டமைக்காக இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பை சந்தித்த போதிலும்,மீண்டும் கனடா பிரதமர் இந்திய விவசாயிகளுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
கனடா பிரதமரின் கருத்து இரு நாடுகளிற்கு இடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என இந்தியா எச்சரித்துள்ளமை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே கனடா பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் எந்த பகுதியிலும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு எப்போதும் கனடாவின் ஆதரவுள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்குமான முயற்சிகள் இடம்பெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான கனடா தூதுவரை அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சு, கனடா பிரதமரின் கருத்து குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.