பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தினை பயன்படுத்துவதற்கு பஹ்ரைன் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிறுவனங்களின் தடுப்பூசி மருந்தினை பயன்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன் பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில், இரண்டாவது நாடாக பஹ்ரைனும் தற்போது கொரோனா தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பஹ்ரைன் செய்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் பஹ்ரைனின் தேசிய சுகாதார ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை முழுமையான ஆய்வினை மேற்கொண்ட பின்னர் மருந்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக பஹ்ரைன் செய்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்தினை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் மக்களுக்கு வழங்கும் பணி எப்போது தொடங்கப்படும் போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பஹ்ரைனுடன் எந்த மாதிரியான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது? எவ்வளவு டோஸ்கள்? என்ன கால கட்டத்தில் வழங்கப்படும்? போன்ற தகவல்களை பைசர் நிறுவனம் வெளியிட மறுத்துவிட்டது.
இருப்பினும், தடுப்பு மருந்து விநியோகம், சேமிப்பு உள்ளிட்டவை குறித்த விரிவான திட்டத்தை வகுத்துள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெரோனா தடுப்பு மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், பஹ்ரைன் நாட்டில் சாதாரணமாகவே வெப்பநிலை 40 செல்சியஸை தாண்டும்.
தடுப்பு மருந்தை அந்தவொரு வெப்பநிலையில் வைத்திருப்பதே முக்கியச் சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் அருகே உள்ள சிறிய தீவு நாடான பஹ்ரைன் ஏற்கனவே, சீனா உருவாக்கியுள்ள ‘சினோபார்ம்’ என்ற தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
16 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட பஹ்ரைனில் இதுவரை 87 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கெரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 341 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.