January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜனநாயகத்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்’ – ஜோன் ராட்க்ளிப்

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் உலகின் ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா காணப்படுகின்றதாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜோன் ராட்க்ளிப் தெரிவித்துள்ளார்.

‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ என்ற இணையத்தளமொன்றுக்கு  அவர் எழுதியுள்ள கட்டுரையொன்றிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேசத்தை ஆதிக்கம் செய்வது குறித்து சீனா மிகவும் உறுதியாகவுள்ளது. அமெரிக்காவையும் ஏனைய உலக நாடுகளையும் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் இராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கும் நோக்குடன் சீனா செயற்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் “எனது அனுபவத்திலிருந்து, அமெரிக்க மக்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இன்று அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது. எங்கள் புலனாய்வு அமைப்புகள் இதனை தெளிவாகக் கூறுகின்றன” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுசார் சொத்து திருட்டு காரணமாக சுமார் 500 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருளாதாரத்தை சீனா நாசப்படுத்துகிறது.  மேலும், திருடப்பட்ட தொழில்நுட்பத்தால் உலகெங்கிலும் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

சீனாவிலுள்ள அனைத்து முக்கியத் தனியார் நிறுவனங்களுக்குப் பின்னாலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே உள்ளது’ என்று கூறியுள்ளார்.

அத்தோடு அமெரிக்காவின் புலமைசார் சொத்துக்களை திருடுதல் பிரதியெடுத்தல் சர்வதேச சந்தையில் மாற்றீடு செய்தல் போன்ற தந்திரோபாயங்களை  சீன நிறுவனங்கள் பின்பற்றுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவேதான் சர்வதேச அளவில் பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றின் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே சீனாவின் இறுதி இலக்காகவுள்ளது என்றும் ஜோன் ராட்க்ளிப் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராக வர்த்தகம், இராணுவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் ட்ரம்ப் நிர்வாகம் மிகக் கடுமையான நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.