file photo: Chinese Embassy in Sri Lanka
சீன கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் அமெரிக்க விஜயத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கான வீசா செல்லுபடியாகும் காலத்தை ட்ரம்ப் நிர்வாகம் கட்டுப்படுத்தியுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏனைய சீனப் பிரஜைகளைப் போன்று, கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவுக்கு 10 ஆண்டுகளுக்கான விசாக்களை பெற முடியும் என்ற நிலை காணப்பட்டாலும், ட்ரம்ப் நிர்வாகம் இவ்விடயத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குப் பயணிக்கும் போது, ஒரு மாதம் செல்லுபடியாகும் ஒற்றை- நுழைவு வீசா வழங்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த கட்சியில் 92 மில்லியன் சீனர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளதோடு, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அவர்கள் அனைவரையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மோசமான செல்வாக்கினைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பதவிக்காலம் முடிவடைவதற்குள் சீனா குறித்த நிலைப்பாடுகளைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனா, ஜோ பைடனையும் அவரது குழுவினரையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றதாக அமெரிக்க தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் வில்லியம் இவானினா தெரிவித்துள்ளார்.