பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து அடுத்த வாரம் முதல், இந்த தடுப்பூசி மருந்து பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வருவதுடன் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடப்படவுள்ளது.
பைசர்- பயோன்டெக் நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் மருந்தினை உலகளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கிய முதல் நாடு பிரிட்டன் ஆகும்.
அத்தோடு கொரோனா வைரஸுக்கு எதிராக 95 சதவீத பாதுகாப்பினை வழங்கும் பைசர்- பயோன்டெக் நிறுவனங்களின் மருந்து, பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது எனவும் பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அமைப்பான எம்.எச்.ஆர்.ஏ தெரிவித்துள்ளது.
மேலும் பிரிட்டன் 20 மில்லியன் மக்களுக்கு வழங்கக்கூடிய 40 மில்லியன் டோஸ் மருந்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுடன் பத்து மில்லியன் டோஸ் மருந்துகளை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பைசர் – பயோன்டெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்துவதாக விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
எனினும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளில் வேகமாக தயாரிக்கப்பட்ட மருந்து இதுவாகும். இந்த தடுப்பூசி மருந்து பத்து மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி:
பைசர்- பயோன்டெக் நிறுவனம் ஆர்என்ஏ தொழில்நுட்ப அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியுள்ளது.
மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலையில் இந்த மருந்தை பாதுகாக்க வேண்டும் என்பதுடன் உற்பத்தி செய்த 6 மாதங்களுக்குள் மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.