
ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவத்தளத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத்தாக்குதலில் 34 ஆப்கானிஸ்தான் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் இராணுவத்தளம் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் வெடித்ததில் இராணுவ வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலின் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தாக்குதலில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டின் இராணுவ படைகளுக்கும் எதிராக தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.
தாக்குதல் இடம்பெற்ற முகாமிற்கு அருகில் காணப்பட்ட பொதுமக்களின் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதுவரை இந்த தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
அரசாங்கத்திற்கும் தலிபான் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கட்டாரில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது.
எனினும் இராணுவத்திற்கு எதிராகவும், பொதுமக்களை குறிவைத்தும் தலிபான் தீவிரவாதிகள் அடிக்கடி இவ்வாறான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தாக்குதல்களில் இது மிகவும் கோரமான தாக்குதலாக கருதப்படுகின்றதாக இராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.