ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதையடுத்து உருவாகக்கூடிய நிலைமை குறித்து பிரிட்டன் கவலை தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கிலும் பரந்துபட்ட பகுதிகளிலும் காணப்படக்கூடிய நிலைமை குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என்று பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் பதற்ற நிலை உருவாவதை நாங்கள் விரும்பவில்லை, ஈரானில் என்ன நடந்தது என்ற முழுமையான விபரங்களுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை இலக்கு வைப்பதை தெளிவாக எதிர்க்கும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை நாங்கள் பின்பற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது விஞ்ஞானியின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக இஸ்ரேல் தனது தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே காரில் சென்றுகொண்டிருக்கும் போது துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் காரை வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த பக்ரிசாதே உயிரிழந்தார்.
இரானின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறைத் தலைவரான பக்ரிசாதேவின் படுகொலை உலகம் அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.