July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை; ‘அரச பயங்கரவாதம்’ என இரான் கண்டனம்

இரானின் மிகவும் மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சின் பக்ரிசாதே தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

‘பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புத் துறையின் தலைவரான மோஹ்சின் பக்ரிசாதேவை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்’ என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘பயங்கரவாதிகளுக்கும் மெய்ப்பாதுகாவலர்களுக்கும் இடையே நடந்த மோதலையடுத்து, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பக்ரிசாதே சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்’ என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

‘இது ஒரு அரச பயங்கரவாத செயல்’ என்று இரானின் வெளியுறவு அமைச்சர் மொஹமட்ஜாவட் சரிப் இந்தக் கொலையை கண்டித்துள்ளார்.

இரானின் அணுத்திட்டம்

இரானின் ‘மறைமுகமான அணுவாயுதத் திட்டத்தின் பின்னால்’ விஞ்ஞானி மோஹ்சின் பக்ரிசாதேவே இருந்துள்ளதாக மேற்குலக உளவு அமைப்புகள் நம்புகின்றன.

ஆனால் தனது அணுத்திட்டம் வெறுமனே சிவில் தேவைகளுக்கானது மட்டுமே என இரான் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றது.

2010-2012 காலப்பகுதியில் இரானின் 4 அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். அந்த சந்தர்ப்பங்களில் அந்தக் கொலைகள் தொடர்பில் இஸ்ரேல் மீதே இரான் குற்றம்சாட்டியிருந்தது.

‘இரானின் அணுவாயுதத் திட்டம்’ தொடர்பில் 2018 இல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, மோஹ்சின் பக்ரிசாதேவின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

பக்ரிசாதேவின் படுகொலை தொடர்பில் இஸ்ரேலிடமிருந்தோ அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகனோ கருத்து எதனையும் வெளியிடவில்லை.

இரானுடன் உறவுகளை புதுப்பிக்க விரும்பும் ஜோ பைடன் 

2015 இல் 6 உலக சக்திகளுடன் எட்டப்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம், தனது அணு உற்பத்தியை மட்டுப்படுத்த இரான் இணங்கியிருந்தது.

ஆனால், 2018 இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்த உடன்படிக்கையிலிருந்து விலகியது முதல் இரானும் தன் மீதான கட்டுப்பாடுகளை மதிக்கத் தவறிவிட்டது.

இப்போது ஜோ பைடன் ஜனவரியில் ஆட்சியை பொறுப்பேற்றதும் இரானுடன் மீண்டும் உறவுகளைப் புதுப்பிக்க எண்ணியுள்ளார். இஸ்ரேல் இதற்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.