தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் நாளை’ நினைவுகூரும் முகமாக தமிழீழ ஆதரவு புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது கார்த்திகைப் பூவின் படத்தை ஒளிரச் செய்துள்ளனர்.
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுக்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை லண்டனில் நடைபெறவில்லை.
கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகளை வீடுகளுக்குள்ளும் இணைய ஒன்று கூடல் வாயிலாகவும் நிகழ்த்தும்படி செயற்பாட்டாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கார்த்திகை பூ படத்தை ஒளிவீச்சு மூலம் பதிந்து மாவீரர் நாளை நினைவுகூர்ந்துள்ளனர்.
“நாம் நினைவுகூர்கின்றோம், இலங்கை அரச இனப்படுகொலையிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராடிய மாவீரர்களை நினைவுகூர்கின்றோம்” என்ற வாக்கியங்களையும் ஆங்கிலத்தில் அவர்கள் ஒளிரவிட்டிருந்தனர்.
‘பொதுச் சுகாதார நெருக்கடி காரணமாக இன்று பாரிய பொது நிகழ்வுகளை எங்களால் நடத்த முடியாது என்பதால், எங்கள் மாவீரர்களை வேறு வடிவத்தில் நினைகூர தீர்மானித்தோம்’ என இளம் செயற்பாட்டாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
‘எங்கள் தாயகத்தில் எங்கள் மக்கள் மாவீரர்களை நினைவுகூர்வதை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயல்கின்றது’ என மற்றுமொரு செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.