July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுவிட்சர்லாந்தில் பெண்கள் மீது கத்திகுத்து: தீவிரவாத பின்னணியா என சந்தேகம்

சுவிட்சர்லாந்தின் லுகானோ நகரில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலுக்கு பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்புபட்டிருப்பதாக அந்த நாட்டின் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் லுகானோ நகரில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் 2 மணியளவில் காட்சிக்கு வைக்கப்பட்டடிருந்த கத்தி ஒன்றை எடுத்த பெண் ஒருவர், அருகே நின்ற இரு பெண்களை சராமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த தாக்குதலை மேற்கொண்ட 28 வயதுடைய பெண் சுவிஸ் குடியுரிமை பெற்றவர் எனவும் இவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளைதாக்குதல் சம்பவத்தின் போது குறித்த பெண் “ அல்லாஹு அக்பர்” என கூச்சலிட்டதாகவும் இவர் இஸ்லாமிய அரசைச் சேர்ந்தவர் அல்லது தொடர்புடையவராக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சுவிஸ் ஊடகங்களை மேற்கொள்காட்டி சில சர்வதேச இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசாரணைகளின் போது தாக்குதல் மேற்கொண்ட இந்த பெண் 2017 இல் இணையம் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் சிரியாவில் உள்ள தீவிரவாதியொருவருடன் உறவை ஏற்படுத்தியவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நபரை சந்திப்பதற்காக சிரியாவிற்கு செல்ல முயன்றவேளை இந்த பெண் சிரிய எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு, சுவிஸ் பெடரல் காவல்துறை ஒரு ட்வீட்டில்  சந்தேகநபர் ஜிகாத் தீவிரவாதி பின்னணியைக் கொண்டவர் என்று பதிவிட்டிருந்ததுடன் ஆஸ்திரிய நாட்டின் ஆட்சித்தலைவர் செபாஸ்டியன் குர்ஸ் “இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை” கண்டித்து, “இந்த கடினமான நேரத்தில் நாங்கள்   சுவிட்சர்லாந்துடன் நிற்கிறோம்” என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.