
file photo: Facebook/ Free Kylie Moore-Gilbert
ஈரானில் இரண்டு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய, அவுஸ்திரேலிய விரிவுரையாளர் கைலி மூர் கில்பேர்ட் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று ஈரானிய கைதிகளை விடுதலை செய்வது குறித்த கைதிப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாகவே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைகழத்தின் மத்திய கிழக்கு விவகாரப் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றிய கைலி மூர் கில்பேர்ட்,ஈரானிற்கு விஜயம் மேற்கொண்டபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைலி மூர் கில்பேர்ட் இன்னொரு நாட்டிற்காக வேவு பார்த்தார் என ஈரான் குற்றம்சாட்டியதோடு, கடந்த வருடம் அவர் குற்றவாளி என்றும் அந்நாட்டு நீதித்துறை அறிவித்துள்ளது.
மேலும், அவருக்கு ஈரானிய நீதிமன்றம் 10 வருட கால சிறைத்தண்டனையையும் விதித்திருந்தது.
இந்நிலையில், கைலி மூர் கில்பேர்ட் எதிர்பாராத விதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட கில்பேர்ட் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும், விடுதலைக்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக நீண்ட சோதனைகளுக்கு முகங்கொடுத்ததாகவும், ஈரானிலிருந்து வெளியேறுவது நிம்மதியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.