அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத சதிகாரர் என கூறப்படும் அப்துல் நாசர் பென்பிரிகாவின் பிரஜாவுரிமையை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் மிகப்பெரிய பயங்கரவாத வலையமைப்பின் இஸ்லாமிய ஆன்மீகத் தலைவரான அப்துல் நாசர் பென்பிரிகாவின் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டை நவம்பர் 20ஆம் திகதியன்று ரத்து செய்ததை உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இன்று உறுதிப்படுத்தினார்.
அல்ஜீரியா நாட்டில் பிறந்த பென்பிரிகா அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய பயங்கரவாத வலையமைப்பின் ஆன்மீகத் தலைவராக செயற்பட்டவர்.
அத்துடன் ஒரு பயங்கரவாதக் குழுவை இயக்கியமை, பயங்கரவாதக் குழுவில் உறுப்பினராக செயற்பட்டமை, பயங்கரவாதச் செயலைத் திட்டமிடுவதோடு தொடர்புடைய பொருட்களை வைத்திருந்தமை உள்ளிட்ட மூன்று பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பென்பிரிகாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து 12 வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் பென்பிரிகாவின் தண்டனை காலம் முடிவடையவுள்ள நிலையிலேயே அவரின் பிரஜாவுரிமையை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட முதலாவது நபர் இவர் எனவும் அவருக்கு இது குறித்து அறிவித்துள்ளோம், அவர் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்தும் சிறையிலேயே இருப்பார் எனவும் பீட்டர் டட்டன தெரிவித்துள்ளார்.
மேலும் நம் நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நபர் என்றால், அவுஸ்திரேலியர்களைப் பாதுகாக்க அவுஸ்திரேலிய சட்டத்திற்குள் சாத்தியமானதை நாங்கள் செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பென்பிரிகா தண்டனையை முடித்தபோதும் அவர் அவுஸ்திரேலிய சிறையில் இருக்கிறார். அவுஸ்திரேலிய சட்டத்தின் கீழ் பயங்கரவாத குற்றங்களில் தண்டனை பெற்ற எவரையும் தண்டனை முடித்த பின்னர் மூன்று ஆண்டுகள் வரை தடுத்து வைக்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக பென்பிரிகாவின் சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.