
(File Photo: USS John S. McCain (DDG-56) 2003 / wikipedia)
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷ்ய போர்க்கப்பல் விரட்டியதாக அந்நாட்டு மாஸ்கோ பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான் கடற்பகுதியில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள “பீட்டர் தி கிரேட்” வளைகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“யு.எஸ்.எஸ் ஜோன்.எஸ்.மக்கெய்ன்” என்ற அமெரிக்க கடற்படை கப்பலே இவ்வாறு ரஷ்ய கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது.
கடல் எல்லையைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் ரஷ்யாவின் கடல் எல்லைக்குள் நுழைந்தது. “அட்மிரல் வினோகிராடோவ்” என்ற ரஷ்ய போர்க் கப்பல், அமெரிக்கப் போர் கப்பலை அந்த பகுதியை விட்டு வெளியேறும்படி வாய்மொழியாக எச்சரித்தது.
இதனையடுத்து எச்சரிக்கப்பட்ட பின்னர் அமெரிக்க கப்பல் உடனடியாக பொதுவான கடல் பகுதியை நோக்கி திரும்பியதுடன் அதன் பின்னர் ரஷ்ய கடலுக்குள் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இதனையடுத்து அட்மிரல் வினோகிராடோவ் அமெரிக்க போர்க்கப்பலின் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவருவதாகவும், மேலும் மற்றொரு கப்பல் மீண்டும் அந்த கடற்பகுதிக்கு அனுப்பப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது. “ரஷ்யாவின் இந்த தகவல் பொய்யானது, எங்கள் கப்பல் எந்த நாட்டினதும் கடற்பரப்பிலிருந்தும் வெளியேற்றப்படவில்லை” என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் தனது கடற்பரப்பில் ஒரு பகுதியாக அறிவித்தது முதல் இப்பகுதி பெரும் சர்ச்சையில் உள்ளது.மேலும் இந்த பகுதியை ரஷ்யா தனது கண்காணிப்பில் பராமரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.