January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க அரசியலை தீர்மானிக்கப் போகும் பைடனின் முக்கிய புள்ளிகள் யார்?

அமெரிக்காவில் புதிய ஆட்சிமாற்றத்துக்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றுவரும் நிலையில், தனது அமைச்சரவைக்கான முக்கிய நியமனங்களை ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தின் 6 முக்கிய பொறுப்புகளுக்கான நியமனங்களை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்த பைடன், “அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது, உலகுக்கு தலைமைத்துவம் வழங்கத் தயார், அதிலிருந்து பின்வாங்குவதற்கு அல்ல” என்று கூறினார்.

இதன்படி, அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் துறையின் பணிப்பாளர் பொறுப்பை ஏற்கவுள்ள முதல் பெண்ணாக அவ்ரில் ஹேய்ன்ஸ் நியமனம் பெறவுள்ளார்.

அவ்வாறே, அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் பொறுப்பு லத்தீன் அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வழங்கப்படவுள்ளது.  அந்தப் பொறுப்புக்கு வரும் அலிஹன்றோ மயோர்காஸ், அமெரிக்காவின் சர்ச்சைகள் மிகுந்த குடியேறிகள் விவகாரத்தை சீரமைப்பதில் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முக்கிய பொறுப்புகளுக்கு பைடன் அறிவித்துள்ள 6 பேர்:

ஆண்டனி பிலின்கன்: இராஜாங்க / வெளியுறவுச் செயலாளர்; ஒபாமா காலத்தில் துணை இராஜாங்கச் செயலாளராக பணியாற்றியவர்

ஜோன் கெர்ரி: பருவநிலை மாற்றம் தொடர்பான தூதுவர்; பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையை வடிவமைத்தவர்களில் ஒருவர்; ஒபாமா காலத்தில் இராஜாங்கச் செயலாளராக பணியாற்றியவர்

அவ்ரில்ஹேய்ன்ஸ்: தேசியப் புலனாய்வுத் துறை பணிப்பாளர்; ஒபாமா காலத்தில் மத்திய புலனாய்வுத் துறையின் துணைப் பணிப்பாளராக பணியாற்றியவர்

அலிஹன்றோ மயோர்காஸ்: உள்துறைச் செயலாளர்; ஒபாமா காலத்தில் உள்துறை துணைச் செயலாளராக பணியாற்றியவர்

லிண்டா தோமஸ் கிரீன்பீல்ட்: ஐநாவுக்கான அமெரிக்கத் தூதுவர்; ஒபாமா காலத்தில் ஆபிரிக்க விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளராக பணியாற்றியவர்

ஜேக் சுலைவன்: வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்; ஒபாமா காலத்தில்- துணை ஜனாதிபதியாக இருந்த பைடனுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விளங்கியவர்

ஆட்சி மாற்றத்துக்காக பைடன் அணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே இந்த நியமனங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் மோசடி நடந்துள்ளதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து ட்ரம்ப் பின்வாங்கவில்லை. வழக்கு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள பைடனுக்கு தேவையான நிதியைப் பெறவும், தேசியப் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள் மற்றும் முக்கிய அரச நிர்வாக அதிகாரிகளை அணுகவும் இனி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.