இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு சவூதி அரேபியாவிற்கு இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மான், இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான மொசாட்டின் தலைவரான யசிகோஹென் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் நியோம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த இரகசிய சந்திப்பு குறித்து இஸ்ரேல் மற்றும் சவூதி ஆகிய இரு நாடுகளிடமும் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
இந்த சந்திப்பின்போது ஈரானுடனான உறவுகளை சீர்செய்வது குறித்து ஆராயப்பட்டதாகவும் எனினும் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லையென சவூதி அரேபிய அதிகாரியொருவர் வோல்ரீட் ஜேர்னலிற்கு தெரிவித்துள்ளார்.
2 மணி நேரம் இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்டு உறவை சுமூகமாக்க கடந்த சில வாரங்களாக அமெரிக்கா முயன்று வந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வரலாற்று பகையாளிகள் மத்தியிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு சர்வதேச அரங்கில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரான், சூடான் போன்ற நாடுகளிற்கும் இடையில் உறவுகள் மீண்டும் ஸ்தாபிக்கப்படுவதற்கு அமெரிக்கா உதவியுள்ளதுடன் சவூதி அரேபியாவும் இதனை மிகவும் எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.