October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளராக அன்டனி பிலின்கென் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

file photo: Twitter/ Antony Blinken

அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக அன்டனி பிலின்கெனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் புதிய அமைச்சரவையின் விபரங்கள் நாளை வெளியிடப்படவுள்ள நிலையில், இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

வெளியுறவுக் கொள்கை குறித்த நீண்ட கால அனுபவமுள்ள அன்டனி பிலின்கென் இராஜாங்க செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதே, பைடனின் முதல் அறிவிப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் பிரதி இராஜாங்க செயலாளராகவும், பைடன் துணை ஜனாதிபதியாக செயலாற்றியபோது, தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் அன்டனி பிலின்கென் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்காலப்பகுதியில் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையில் பிலின்கென் முக்கிய பங்காற்றியுள்ளதோடு, கிரீமியா மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு, ஒசாமா பின் லாடனின் கொலை போன்ற சம்பவங்களில் பிரதான ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார்.

ட்ரம்பின் முரண்பாட்டுக் கொள்கை காரணமாக தூரமாகியுள்ள அமெரிக்காவின் பழைய நட்பு நாடுகளுடனான உறவுகளைச் சீரமைக்கும் பணி புதிய இராஜாங்க செயலாளராக நியமிக்கப்படவுள்ள பிலின்கெனிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.