பிரிட்டனில் உருவாக்கப்படும் அஸ்டிராஜெனேகா என்ற கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்து 70 சதவீதமானவர்களை வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கக் கூடியது என்ற புதிய தரவுகள் வெளியாகியுள்ளன.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்டிராஜெனேகா நிறுவனமும் இணைந்து இதனை அறிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் சரா கில்பேர்ட் கூறுகையில்,
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸினை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நாங்கள் மருந்தினை பயன்படுத்தக்கூடிய காலத்தை நோக்கி நெருங்கிச்செல்கின்றோம்.
மருந்துகளை ஒழுங்குப்படுத்தும் தரப்பை சேர்ந்தவர்களுக்கு மேலும் தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் தொடர்ந்தும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போகின்றோம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு முழு உலகிற்கும் பலனளிக்ககூடிய பல்நாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக விளங்குவது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட மருந்தினை மூன்றாம் கட்ட பரிசோதனைக்குட்படுத்தியவேளை இரண்டு தடவைகள் இந்த மருந்தினை பயன்படுத்தினால் 70 வீத பயன் கிடைப்பது தெரியவந்துள்ளது என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது இந்த தடுப்பு மருந்தை 3 ஆம் கட்டம் மருத்துவ பரிசோதனைகளுக்காக இந்தியா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 60 இற்கும் மேற்பட்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோதனை முடிவுகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் சோதனை முடிவுகள் வெளியாகி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரிட்டனின் இந்த தடுப்பூசி மருந்தை பரிசோதனைக்குட்படுத்தியபோது ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தடுப்பு மருந்து பரிசோதனை இடைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து பிரிட்டனின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்து, பரிசோதனையை பிரிட்டனில் மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று விசாரணைக்குழு, மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.